Blog Archive

Wednesday, January 15, 2014

பொங்கலோ
பொங்கல்
_____________________

தண்ணீர் இல்லாத பொங்கல்
கேட்டது உண்மைதான்..
அர்த்தம் தெரியாத இயற்கையோ
மழையைப் பொய்த்தது...

கோடி கோடியாய்
கொட்டிக் கொடுக்கிற
தண்ணீரை
என் பாட்டன் குடித்தான்
அப்பன் குடித்தான்
நானும் குடித்தேன்
என் பிள்ளைகளோ
நீந்திக் களித்தனர்..

நூறுநாள் வேலையில்
கிடைத்த நோட்டை
நாட்டுக்கு கொடுத்தான்
என் ஆதித் தமிழன்
அரசாங்கம் மட்டுமா
இலவசம் கொடுக்கிறது
நம்மூர் ஏழையும்
நன்றாகக் கொடுக்கிறான்
அரசு கருவூலம்
செல்வத்தில் மிதக்கிறது

மாட்டுப் பொங்கலில்
படையலிடணும்
செத்து ஒழிந்த
அத்தனை மூதாதைக்கும்
ஆட்டுக்கறி வாங்கணும்
கோழி சமைக்கணும்
மீனு வாங்கணும்
கருவாட்டு குழம்பு
ராணி மார்க் சுருட்டு
சூடாக பட்டைச்சாரயம்
என்ன செய்யப் போகிறேன்..

மாமழை போற்றி
ஏமாந்த குடும்பம்
விதைக்கால் விட்டு
விதை நெல்லும் போச்சு
கடைசியில்
என் அப்பன் செய்ததையே
நானும் செய்தேன்
பொங்கல் கொண்டாட..

சந்தோஷம் கூடிடும்
ராஜஸ்தான் மார்வாடி
கறாறானவன்..
பைனான்ஸ் கம்பெனிகள் போல
அவன் அடியாட்களை
அமர்த்துவதில்லை
வீட்டு வாசலில் வந்து நிற்பதுமில்லை
மூணு பண்ணெண்டு முப்பத்தாறு வட்டி
உண்மையில் அவன் ரொம்ப நல்லவன்

நல்லநாளும் அதுவுமா
பொங்கப்பானையில கட்டுற மஞ்சளை
கழுத்துல கட்டினான்
ஆதிதமிழன்

இரண்டு நாளைக்கு
தண்ணிக்குப் பஞ்சமில்லே
அவனோட மூதாதைகளின்
ஆத்துமாவுக்கும் தான்..
சாந்தி..
ஓம் சாந்தி..

பொங்கலோ பொங்கல்
புதுசரக்குப் பொங்கல்
பொங்கலோ பொங்கல்
புதுசரக்குப் பொங்கல்...
பல கோடி வருமானம்
அரசாங்கப் பொங்கல்..

நூறு ரூபா
வெல்லம்
அரிசியோடு
அம்மா படம் போட்ட
அழகு துணிப்பை
கடைகோடி தமிழனுக்கு
நம்பிக்கைப் பிறந்தது

வானம் பொய்த்தது
அரசாங்கம் தண்ணி விக்குது
சாவு வந்தது
அரசாங்கம் நூற்றியெட்டை அனுப்பிச்சி
இலவச
டிவி
அரிசி
வேட்டி சேலை
கிரைண்டர்
மிக்ஸி
முதியோர் பென்சன்
வாழ்க அரசு..நம் தமிழ் அரசு
அரசாங்கத்தின் மேல்
அம்புட்டு நம்பிக்கை
நிம்மதி பெருமூச்சு..

ஆதித்தமிழனுக்கு..
அடுத்த தீவாளிக்கு
அப்பொறம் வரும் பொங்கலுக்கு
அப்பனுக்குப் படைக்க
முனியாண்டி சாமிக்கு
மனசு நல்லா குளிர
வீட்டுக்காரி தாலியை
சேட்டுக் கடையில வைக்க வேணாம்
அம்மா நல்லவங்க
தாத்தா ரொம்ப நல்லவரு
பச்ச கார்டுக்கு
ஒரு குவாட்டரு நிச்சயம்

பொங்கலோ பொங்கல்
புதுசரக்குப் பொங்கல்
பொங்கலோ பொங்கல்
புதுசரக்குப் பொங்கல்...
நம்பிக்கைப் பொங்கல்
நம்தமிழின் பொங்கல்...