Blog Archive

Saturday, March 31, 2007

சக்கரை ரஹஸியம்

''சக்கரை விலை ஏறிக்கிடக்கு
உனக்கு மட்டும் தாராளம்
சக்கரையை வைக்க வேண்டிய இடம்
சிறுநீர் அல்ல''
"இதுபரம்பரை வியாதிப்பா"
டாக்டர் தமாஷ் செய்தார்...

பரம்பரை
என்றதும் தாத்தா ஞாபகம்
பறங்கிப்பேட்டைஅல்வா அவருக்கு உசிரு.
கடலூர் டியூட்டி விட்டு
அல்வாவுக்காக ஆறு மைல் சுற்றுவழி
கொத்தட்டை நேர்வழி விட்டு
பறங்கிப்பேட்டை வழி பஸ் பிடிப்பேன்
திருநெல்வேலி எட்டாத தூரம்.

"எங்க பரம்பரையில் பெஞ்சாதி அதிகம் உண்டு
சக்கரை தட்டுப்பாடுதான் டாக்டர்"
டாக்டர் அசரவில்ல.

"என்னவேலைப் பாக்கிறே"கேட்டார்
"பேங்கில வேலை ராஜா வாட்டம்"

"கார்த்தால எப்ப எழுவே"
"ஏழரை ..விட்டா எட்டு"

"எழுந்தவுடன் என்ன செய்வே"
டாக்டர் கேட்டார்
"பாத்ரூமில் புகை விடுவேன்
வராத போது பேப்பர் கூட படிப்பேன்"

"சாப்பாட்டுப் பழக்கம் எப்படி"
டாக்டர் கேட்டார்
"காலையில் இட்லி சாம்பார் வெட்டுவேன்
காபி, டீ நாளைக்கு எட்டு
மணி தவறாது சிகரெட்டு
மதிய சாப்பாடு முனியாண்டியில
மாலை டிபன்
கேசரி(அ) அல்வா கட்டாயம் உண்டு
ராத்திரி சொல்லட்டா...."கேட்டேன்

"உட்கார்ந்து தின்னும் உன்மத்தன்"
டாக்டர் முணுமுணுத்தார்.

"சரி .. உன் பாட்டன் எப்படி ?
சொல் பார்க்கலாம்"

"தாத்தாவுக்கு எண்பது வயது;கிழம்
விடியலில் துயில் எழும்
வயல் வரப்பில் கடன் கழிக்கும்
காலையில் கேப்பக்களி
மதியான சாப்பாடு மரக்கறி தான்
தோட்டத்துக் காய்கனி, கீரைகள் ஏராளம்
ஆனாலும்
அவரோட மண்புழு 'பாடு'க்கு
இவையெல்லாம் எம்மாத்திரம்?

'போதும் உன் சங்கதி'
புகன்றார் டாக்டர்
'சக்கரை உனக்குப் பரம்பரை இல்லை;
சாப்பிட்ட சக்திய உடம்பு கிரகித்துக் கொள்வது
கற்க: கற்ற பின் நிற்க;அதற்கு தக போல
எஞ்சிடும் சக்கரை புத்திரர் போல;
அதிகம் சேரக்கூடாது
மாத்திரை போடு.
டயட் முக்கியம்;
இதற்கும் மேலாக
இன்னொன்று முக்கியம்
உன் பாட்டன் செய்கிற
எண்பது வயதிலும் மண்புழு உழப்பு.

என் டயபடிக் ரஹஸியம்
புரிய தொடங்கியது.

No comments: