Blog Archive

Saturday, March 31, 2007

எத்தனையோ...
கிடைத்தது..நீதியைத் தவிர..
___________________________
சல்லடைப் போட்டுச் சலித்தார்கள்
பெருமளவில் குவிந்தன
கைதவறிய நாணயங்கள்.

கல்யாண மாலைக்கு
காதலிப் பெண்கள் கழற்றி எறிந்த
கைவிரல் மோதிரங்கள்
காதல் பரிசுகள்
இன்னும் எத்தனையோ...

வண்டி வண்டியாய் நாணங்கள்
வாக்குறுதி வார்த்தைகள்

சுண்டலுக்காக விற்கப் பட்ட
காகிதக் கவிதைகளின்
கிழி பட்ட ஏடுகள்

வார்த்தை வாளால் கீறி புதைபட்ட
மறுதலிக்கப் பட்ட
காதல் இதயங்கள்

அவசரத்தில் இட்ட
முத்த மழைகள்
காதல் தீ எரித்த
காதல் திருடர்களின்
கன்னக் கதுப்பில் கசிந்தோடிய கண்ணீர்..
இன்னும் எத்தனையோ...

அலை திருடிய
பிளாஸ்டிக் செருப்பால்
அம்மாவிடம் உதை வாங்கிய
பிஞ்சு மழலையரின் அழுகை

காலைதோறும் கால் நடையான
இதய வாக்கர்களின் பெருமூச்சோடு
வேர்வை கசிந்த ஈர மண்

தமிழ்மாநாட்டில்
தலையெடுத்த சான்றோரின்
சிலை வடித்த கண்ணீரும்
காதல் தமிழும்..

அரசியல்வாதிகள்
அந்திமத்தில் நடத்திய
கட்சித் தாவலில்
கை மாறிய போது
வேண்டுமென்றே
கைவிடடப் பட்ட கொள்கைகள்


சுண்டிச் சோற்றுக்கும்
கஞ்சா இலைக்கும்
கண்பூத்துச் சுற்றிய
போதைக் கால்கள்
இப்படி
இன்னும் எத்தனையோ...

மெரினா மணலை
அலங்கரிக்கும் திட்டத்தில்
லட்சமாய்க் கொட்டி
குப்பையைக் கிளறியதில்
இன்னும் எத்தனையோ...
கிடைத்தது..

கண்ணகி சிலையும்
அவள் கேட்ட நீதியைத் தவிர..--

1 comment:

S Murugan said...

"எத்தனையோ கிடைத்தது நீதியைத்தவிர"அருமையான கவிதை. நீதி தான் பாதி விலைக்கு விற்கப் படுகிறதே!அதனால் தான் சில சமயங்களில் கிடைப்பதில்லை.